ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்... தமிழக அரசியலில் பரபரப்பு
- தமிழகத்தில் ஏற்படப்போகும் பிரம்மாண்ட மாற்றத்திற்கு திருப்புமுனையாக அமையும் நிகழ்வு.
- நாம் இணைந்திருக்கிறோம், இணைப்பு பலப்படும், நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.
அந்த வகையில் நேற்று சென்னை வந்த தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக த.வெ.க.வுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசும் நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் விழாவில் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி, கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் மற்றும் த.வெ.க. மூத்த நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் காங்கிரஸ் எம்பி., எம்எல்ஏக்களும் பங்கேற்பதாக அழைப்பிதழ் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், அவர்கள் இவ்விழாவை புறக்கணித்துள்ளனர்.
மேலும் விழாவில் பேசிய திருச்சி வேலுசாமி, பாவப்பட்டவர்களை ரட்சிக்கவும், ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றவும் தோன்றினார் ஏசு. பாவிகள் ரட்சிப்பு, ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றும் எண்ணம்கொண்டோர் மட்டுமே இங்கு கூடியுள்ளோம். தமிழகத்தில் ஏற்படப்போகும் பிரம்மாண்ட மாற்றத்திற்கு திருப்புமுனையாக அமையும் நிகழ்வு. அதற்கு பின்னணியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள், புரிந்தவர்கள் கை தட்டுவார்கள். நாம் இணைந்திருக்கிறோம், இணைப்பு பலப்படும், நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும் என்றார்.