தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. அதிகாரத்தை வைத்து மிரட்டவில்லை- டி.டி.வி. தினகரன்

Published On 2025-12-07 12:02 IST   |   Update On 2025-12-07 12:02:00 IST
  • ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை.
  • தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும்.

திருப்பூர்:

அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும். சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தூங்கிக்கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

பதவி ஆசை, சுயலாபத்திற்காக பிரித்து விட்டார்கள். அவர்களாக திருந்த வேண்டும். அல்லது அவர்களை யாராவது எழுப்ப வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என பா.ஜ.க., தலைவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள்.

ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை தவறாக நினைக்கவில்லை. அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க., அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை. இது நட்பு ரீதியானது.

53 ஆண்டாக அ.தி.மு.க.வில் இருந்த செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனீ போன்று சுறுசுறுப்பானவர். அவர் கோபத்தில் த.வெ.க.வுக்கு சென்றிருக்கமாட்டார். சிந்தித்து நிதானமாகவே முடிவெடுத்திருப்பார்.

செல்லூர் ராஜூ காமெடியாக ஏதாவது பேசுவார். இலை உதிர்ந்தால் பிரச்சனை இல்லை. விழுதுகளாக உள்ளவர்கள் சென்றது அவருக்கு புரியவில்லை. 16-ந்தேதி ஈரோடு விஜய் பிரசாரத்திற்கு வழிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவார்கள்.

தமிழகம் அமைதி பூங்கா. இங்கு சாதியை கடந்து மதத்தை கடந்து வாழ்ந்து வருகிறோம். மத நல்லிணக்கம் அடிப்படையானது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மூலம் எல்லோரும் சமம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கடவுளின் பெயரையோ மதத்தின் பெயரையோ சாதியின் பெயரையோ கூறி தேவையற்ற பிரச்சனைகள் கலவரங்கள் உருவாகாமல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதனை அரசும் நீதிமன்றமும் சரியாக செய்வார்கள் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும். நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் 5-வது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் 4 முனை போட்டி தான் இருக்கும். வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கும்.

சீமான் தனித்துப்போட்டியிடுவார். தி.மு.க., அ.தி.மு.க., விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. நான் யாருடன் செல்கிறேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை.

கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர். இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். அ.ம.மு.க.வில் தேர்தலுக்காக அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். 

Tags:    

Similar News