பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது.
- தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்திக்க உள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று தே.மு.தி.க.வுடன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார். தற்போது மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கூறிய டி.டி.வி.தினகரன், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைய உள்ளார்.
தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்திக்க உள்ளார்.