தமிழ்நாடு செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கேட்கவில்லை- மத்திய அரசு தகவல்

Published On 2024-12-13 07:19 IST   |   Update On 2024-12-13 07:19:00 IST
  • சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • பல மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே தமிழக அரசு பணிகளை தொடங்கி விட்டது. எனவே இந்த திட்டம் மாநில அரசின் திட்டமாக கருதப்பட்டு, அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு, இந்த நிதியை ஒதுக்குவதாக அறிவித்து விட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்த இந்த நிதியில் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி மனோகர்லால் கட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் 'மத்திய அரசு ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் மத்திய தொகை, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் கேட்கும் கோரிக்கைக்கு ஏற்ப விடுவிக்கப்படும். அதில் சென்னை மெட்ரோ நிறுவனம், இதுவரை மத்திய நிதி உதவி குறித்து எந்த கோரிக்கையும் எழுப்பவில்லை' என்றார்.

மேலும் அவர் மதுரை-கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை கடந்த 5-ந் தேதி தான் தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்யும். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதி ஆதாரம் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையில் தமிழக அரசு மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு தந்த அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு அதற்கு விரைவில் அனுமதி அளிக்கும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் அவர், பல மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இப்போதைக்கு சென்னையில் மட்டும் தான் மெட்ரோ திட்டம் உள்ளது.

எனவே மதுரை-கோவைக்கு நிச்சயம் அனுமதி வழங்கப்படும். வரும் பாராளுமன்ற பட்ஜெட்டில் கூட இதற்கான நிதியும் ஒதுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது' என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News