'லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது' - மாணிக்கம் தாகூருக்கு வைகோ பதிலடி!
மதிமுக தலைவர் வைகோவும், விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்த நிலையில், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் தங்களுக்கு கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தாகூரின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ,
'லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் எங்கள் எல்லையை தாண்டவில்லை. கூட்டணி தர்மம் தழைப்பதற்கும், தலைமையை மதித்து செயல்படுவதற்கும் இலக்கணமாக திகழும் கட்சி மதிமுக. கூட்டணியில் இருக்கும் கட்சிகளை விமர்சிக்கும், புண்படுத்தும் வகையில் நாங்கள் எந்த கருத்தையும் கூறமாட்டோம்.' என தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு பதிலளித்த துரை வைகை,
"மதிமுகவிற்கும், காங்கிரஸிற்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் கூறியது குறிப்பிட்ட அந்த நபரை மட்டும்தான்(பிரவீன் சக்ரவர்த்தி). அதற்கான விளக்கத்தையும் மாணிக்கம் தாகூரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரவீன் சக்ரவர்த்தி உத்தரப்பிரதேசத்தின் கடனைவிட, தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் அதிகம் என தெரிவித்திருந்தார். இது தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியின் தலைமை கட்சியான திமுகவை நேரடியாக தாக்குவதாக அமைந்தநிலையில், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதற்கு மாணிக்கம் தாகூர் தங்கள் உட்கட்சி பிரச்சனையில் மற்ற கட்சிகள் தலையிட வேண்டாம் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளனர்.