லண்டனில் முதலமைச்சர் மரியாதை செலுத்திய திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் விபூதி இருந்ததா?
- தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
- லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். தனது பயணத்தின் ஒரு அங்கமாக, லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஓ.ஏ.எஸ்.) உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில், அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளரும், எம்.பி.யுமான ஐ.எஸ்.இன்பதுரை, மு.க.ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம் என்ற தலைப்பில், நெற்றியில் விபூதி வைக்கப்பட்ட திருவள்ளுவரை மு.க.ஸ்டாலின் கும்பிடுவது போன்ற படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''விபூதியுடன் திருவள்ளுவர் இருக்கும் படம் 'எடிட்' செய்த படம்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நெற்றியில் விபூதி இல்லாமல் உள்ள திருவள்ளுவர் படத்தையும், நெற்றியில் விபூதி இருப்பது போன்ற 'எடிட்' செய்யப்பட்டதாக கூறப்படும் திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டுள்ளது.