தமிழ்நாடு செய்திகள்

அதிமுக கூட்டணியில் இணைவதற்கு யாரும் தயாராக இல்லை - இ.பி.எஸ். அழைப்பை நிராகரித்த திருமா

Published On 2025-07-17 08:18 IST   |   Update On 2025-07-17 08:18:00 IST
  • அ.தி.மு.க.வை பொறுத்தவரை எங்களது கூட்டணியில் இணைபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் கட்சி ஆகும்.
  • அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தில் நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் தனது பிரசார பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அப்போது சிதம்பரத்தில் பிரசார வேனில் இருந்தபடி எடப்படி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க.வின் கூட்டணி கட்சிக்கே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். ஏனெனில் விழுப்புரத்தில் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கும், திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கும் கொடி நடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இவ்வளவு அவமானப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா, தொடர வேண்டுமா?. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எங்களது கூட்டணியில் இணைபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் கட்சி ஆகும்.

தி.முக. கூட்டணி வைத்துள்ள அத்தனை கட்சியோடும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. எனவே எங்களைப்பற்றி பேச எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற நீங்கள் தற்போது செய்யும் தந்திர மாடல் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறுகையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம். அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே எடப்பாடி பழனிசாமி அழைக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு யாரும் தயாராக இல்லை என்ற சூழ்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என எடப்பாடி பழனிசாமி சொல்லுவது அவர் கருத்தாக இல்லை, யாரோ சொல்வதை திருப்பி கூறுகிறார். நிறைவேறாது என தெரிந்தும் திரும்பத்திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News