தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.விற்கு முட்டு கொடுக்கிறேனா? - திருமாவளவன் விளக்கம்

Published On 2025-10-23 10:44 IST   |   Update On 2025-10-23 10:44:00 IST
  • சாயும் நிலையில் உள்ள கட்சிக்கு தான் முட்டுக்கொடுக்க வேண்டும்.
  • தி.மு.க. அசுர பலத்துடன் 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற கட்சி.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க.விற்கு முட்டு கொடுப்பதாக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசியல் தி.மு.க. vs அ.தி.மு.க. என இருப்பதே தமிழகத்திற்கு தேவை. தமிழக அரசியலை தி.மு.க. vs பா.ஜ.க. என மாற்றி விடாதீர்கள். 2026 தேர்தலில் தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் அஜெண்டா. அது தெரியாமல் பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. உறவாடிக்கொண்டு இருக்கிறது.

ஆனால் சாதி ஒழிப்பை ஏற்காதவர்கள், சமத்துவத்தை ஏற்காதவர்கள், பெண் உரிமையை விரும்பாதவர்கள் இந்த மண்ணில் வலுப்பெற வேண்டும் என்று விரும்புவதை அதற்கு முயற்சிப்பதை, அதற்கான அரசியல் நகர்வுகள் செய்வதை எப்படி நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியும்.

இதனால் நாம் தலையிட்டு பேசினால் நாம் தி.மு.க.விற்காகத்தான் பேசுவதாக சில அற்பர்கள் தி.மு.க.விற்கு முட்டு கொடுப்பதாக பேசுகிறார்கள்.

தி.மு.க. கோலாச்சுகின்ற கட்சி. அதற்கு ஏன் முட்டுக்கொடுக்க வேண்டும். சாயும் நிலையில் உள்ள கட்சிக்கு தான் முட்டுக்கொடுக்க வேண்டும்.

தி.மு.க. அசுர பலத்துடன் 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற கட்சி. அந்த கட்சியை எதிர்த்தவர்கள் காணாமலும், கரைந்தும் போனார்கள். அந்த கட்சி அவர்களை எதிர்கொள்வதற்கு வலிமை உள்ள கட்சி. அதற்கு ஏன் முட்டுக்கொடுக்க வேண்டும்.

நாங்கள் ஏன் தலையிடுகிறோம் என்றால் நாங்கள் பேசும் அரசியலுக்கு நீங்கள் வேட்டு வைக்கிறீர்கள். நாங்கள் பேசுவது சமூக நீதி அரசியல். பெரியாரிய அரசியல், அம்பேத்கரிய அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News