தமிழ்நாடு செய்திகள்

வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெறுவார் என்ற வாதத்தை ஏற்க முடியாது- வைகோ

Published On 2025-10-24 17:18 IST   |   Update On 2025-10-24 17:18:00 IST
  • தி.மு.க. தலைமையிலான கூட்டணி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.
  • கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் ஆறாத காயம் வடு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் பரபரப்பு இப்போது ஆரம்பித்துவிட்டது. மாலை நேரங்களில் அரசியல் விவாதங்கள், நாள்தோறும் சுவாரசியமான பரபரப்பு வாதங்கள் நடைபெற்று வருகிறது.

கலை உலகில் மின்னும் நட்சத்திரமான விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார். கரூரில் 7 மணி நேரம் கூட்டம் காத்திருந்தது குறித்து அவருக்கு சொல்லி இருப்பார்கள். கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்துவிடும் என்று யூகித்து, சரியான முறையில் கையாண்டிருக்கலாம்.

அதிகமான கூட்டம் குறித்து அவருக்கு முன்னால் இருக்கக்கூடிய இயக்கத்தினர்கள் சொல்லி கூட்டம் அதிகமான தகவலை விஜய்க்கு தெரிவித்து இருக்கலாம். கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய அந்தப் பதட்டத்தில் விஜய் சென்னை சென்றுவிட்டார்.

திருச்சியில் விடுதியில் தங்கியிருந்து ஒரு நாள் கழித்து கூட உயிர் பலியான குடும்பத்தினருக்கு நேரடியாக அவர் சென்று இரங்கல்களை தெரிவித்திருக்கலாம். 1994-ல் சென்னையில் நாங்கள் நடத்திய பேரணி கூட்டத்தில் உயிர் சேதம் நடந்துவிடக்கூடாது என்ற பயமிருந்தது. அதனை கட்டுக்கோப்பாக நடத்தினோம். லட்சக்கணக்கான தொண்டர்களை பாதுகாக்க 3000 தொண்டர் படைகளை உருவாக்கினோம்.

ஆனால் கரூரில் 7 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் பொதுமக்கள் குழந்தைகள் கீழே மயங்கி விழுந்துள்ளனர். ஆதவ் அர்ஜூன், ஆனந்த் ஆகியோர் இது நடந்திருக்காமல் பார்த்து இருக்கலாம். அதிக கூட்டம் கூடும் இடங்களில் குழந்தைகளை கொண்டு போகாமல் தாய்மார்கள் தவிர்த்திருக்கலாம்.

கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் ஆறாத காயம் வடு ஏற்பட்டுள்ளது. கருரில் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அடுத்து இதுபோன்று இனிமேல் நடக்கும் கூட்டத்திற்கு பாதுகாப்பு முன்னேற்பாடு செய்ய வேண்டும்.

தேர்தலில் இந்த சம்பவம் எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கேட்கிறார்கள். என்ன சொன்னாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வரப்போகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எந்தஒரு பாதிப்பும் தி.மு.க.வுக்கு வராது. இப்போது நடத்தப்படும் யூகங்கள், கணக்கெடுப்பு போன்று தேர்தல் நடக்காது. புதிதாக வந்தவர் (விஜய்) பெருமளவு வெற்றி பெற்று விடுவார்கள் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

காசா- பாலஸ்தீன போர் குறித்து டிரம்ப் பொய் சொல்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்ற டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக பேரணிகள் நடத்தியுள்ளனர். நான் நாடாளுமன்றத்தில் பலமுறை பாலஸ்தீன மக்களுக்காக வாதாடியுள்ளேன். காசா படையெடுப்பு தாக்குதலை நிறுத்தவும், உக்ரைன் போர் தாக்குதலை நிறுத்தவும் வேண்டும்.

தேஜஸ்வி இந்தியா கூட்டணியின் சார்பில் பீகார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய கூட்டணியில் இருந்து ஒருவர் விலகி உள்ளார். அதனால் பீகார் தேர்தலில் இந்த முடிவுதான் வரும் என யூகித்து சொல்ல முடியவில்லை.

நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் எதன் அடிப்படையில் தெரிவித்தார் என்று தெரியவில்லை. தினம் ஒரு அறிக்கை விடுகிறார். அவரது அறிக்கைக் கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News