தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்தில் ஐகோர்ட் உத்தரவுபடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது

Published On 2025-10-04 12:04 IST   |   Update On 2025-10-04 12:04:00 IST
  • தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
  • கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கரூர்:

கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஏற்கனவே இந்த வழக்கினை முதலில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், மத்திய மாவட்ட நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்கியது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். அது மட்டுமில்லாமல் கூடுதல் துணை போலீஸ் சூப்பரண்டுகள், துணைபோலீஸ் சூப்பிரண்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.

ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமி புறம் பகுதியை பார்வையிடுகிறார்கள். அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிர படுத்த உள்ளனர்.

முன்னதாக வழக்கின் அத்தனை ஆவணங்களையும் கரூர் போலீசார் இன்று சிறப்பு புலனாய்வு குழு தலைமை அதிகாரி அஸ்ராகர்க்கிடம் ஒப்படைத்தனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.

அவர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News