தமிழ்நாடு செய்திகள்

"டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published On 2026-01-23 18:36 IST   |   Update On 2026-01-23 18:36:00 IST
  • பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது
  • ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.  இதில், "பாஜக - தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

"மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும், உங்களின் துரோகங்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு_தலைகுனியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News