ரூ.1.5 கோடி அபராதத்திற்கு எதிரான விஜய்யின் மனு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய நடவடிக்கை
- ஆகஸ்ட் 16, 2022-ல் வருமான வரித்துறை உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
- வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் முறையாகவே விதிக்கப்பட்டுள்ளது
வருமான வரித்துறைக்கு எதிராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் தாக்கல் செய்த மனுமீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2015-16 நிதியாண்டில் 'புலி' படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, 2022-ல் வருமான வரித்துறை விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி ஆகஸ்ட் 16, 2022-ல் வருமான வரித்துறை உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், இந்த அபராத உத்தரவு சட்டப்பூர்வமான காலக்கெடுவுக்குள் பிறப்பிக்கப்படவில்லை என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்டதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் முறையாகவே விதிக்கப்பட்டுள்ளது என்றும், விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.