SIR- தமிழகத்தில் வாக்கு இழப்பை தடுக்க காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
- புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
அதேநேரம் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த பீகார் மாநிலத்திலும் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து முடித்து தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இதற்கிடையில் 2-ம் கட்டமாக 2026-ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த 27-ந்தேதி முதல் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்த மாநிலங்களில் 51 கோடி வாக்காளர்களின் பெயர்கள், முகவரிகள் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனால் இந்த பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்து பல கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இன்னொரு பக்கத்தில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு உதவி வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 பேருக்கு சிறப்பு திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு திருத்த பணிகள் நடந்து வரும் 12 மாநிலங்களிலும் உண்மையான கள நிலவரம் என்ன? வாக்காளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா பவனில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி 12 மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், சூரஜ்ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக டெல்லி மேலிடம் அமைத்துள்ள 38 பேர் கொண்ட குழுவுடனும் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் 38 பேரையும் டெல்லிக்கு வரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உருவாகி இருக்கும் கூட்டணி சர்ச்சைகள் தொடர்பாகவும் டெல்லி மேலிடத்தில் பேசுவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்து உள்ளார்கள். அதற்காக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகிய 3 பேரும் இன்று பிற்பகலில் டெல்லி செல்கிறார்கள்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவர்கள் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையில் இந்த தலைவர்கள் தமிழக பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், அகில இந்திய தலைவர் கார்கே ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்கள்.
காங்கிரஸ்-த.வெ.க. கூட்டணி ஏற்படலாம். இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் விஜய்யுடன் பேசி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தி.மு.க.வுடனான கூட்டணி முறியலாம் என்ற கருத்தும் காங்கிரசுக்குள் பரவி வருகிறது. தற்போதைய சூழலில் தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதையே கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை டெல்லி தலைவர்களிடம் விளக்குவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.