தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வில் முக்கிய பதவி- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

Published On 2025-11-26 11:46 IST   |   Update On 2025-11-26 12:09:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் இந்த முடிவு எடுத்துள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்தார்.

இது அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஆதரவாளர்களை திரட்டி தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்த செங்கோட்டையன் அ.தி.மு.க. இணைப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறி வந்தார். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய செங்கோட்டையன், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தனது கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்காத நிலையில் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கைகோர்க்க உள்ளார்.

இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் ஏற்கனவே செங்கோட்டையனை சந்தித்து பேசி அவர் த.வெ.க.வில் சேருவதை உறுதி செய்துள்ளனர். இதற்காக சென்னை வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நாளை செங்கோட்டையன் இணையும் விழா நடைபெறுகிறது.

அந்த கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொள்கிறார். அவருடன் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகத்துக்கு சென்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.

இதையடுத்து தனது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். அதே போன்றுதான் செங்கோட்டையனும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News