அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல்: செல்வப்பெருந்தகை
- பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர்.
- திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் மந்தமாக இருக்கின்றது.
சென்னை:
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
எதற்காக சுதந்திரத்தை தலைவர்கள் போராடி பெற்றுக் கொடுத்தார்களோ அது மாறி, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமை பறிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையெல்லாம் இந்த தலைமுறை படிக்க வேண்டும். நாளை மறுநாள் வாக்குத்திருட்டு, வாக்கு அதிகாரம் என்ற மாநாடு காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்த தலைவர் பேச உள்ளனர்.
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த டி.டி.வி. தினகரன் வெளியே வந்துவிட்டார். ஓ.பி.எஸ். வெளியே வந்துவிட்டார். இன்னும் யாரெல்லாம் வெளியே வரப் போகிறார்கள் என தெரியவில்லை. அது மூழ்குகின்ற கப்பல். அதில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொருவராக காரணத்தை சொல்லி வெளியே வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியை ஏற்க மாட்டார்கள். அது எதார்த்தமான உண்மை. இதை புரிந்து கொண்டதால் டி.டி.வி. தினகரன் வெளியே வந்தார். இன்று செங்கோட்டையன் வெளியே வந்து உள்ளார். ஆகையால் மக்கள் இவர்களுக்கு கெடு கொடுத்து விட்டனர். இது மூழ்குகின்ற கப்பல். இதில் ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம் என்று ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
உறவாடி கெடுக்கும் ஒரு கட்சிதான் பா.ஜ.க. இதற்கு பல சம்பவங்கள் இருக்கு. எல்லா மாநிலங்களிலும் அவர்களது சித்து விளையாட்டை நடத்தியுள்ளனர். இப்போது உச்சபட்சமாக அ.தி.மு.க.வில் அவர்களது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே அ.தி.மு.க.வினர் விழித்துக் கொள்ள வேண்டும்.
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் மந்தமாக இருக்கின்றது. தூத்துக்குடி, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் ஏற்றுமதி மந்தமாக இருக்கின்றது. மக்களிடம் இருப்பு குறைந்துவிட்டது. மக்கள் விலை உயர்வால் கஷ்டப்படுகின்றனர். ராகுல் காந்தி 10 வருடங்களுக்கு முன்பே ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று சொன்னார். 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு அவர்கள் குறைத்து இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சொர்ணா சேது ராமன், மாநில நிர்வாகிகள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ. வாசு, சுரேஷ் பாபு, மகிளா காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் கானப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, இயல், இசை, நாடக மன்றம், பொதுக்குழு, நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகரும், காங்கிரஸ் கட்சி மாநில கலைப்பிரிவு துணைத் தலைவருமான கலைமாமணி தாராபுரம் கலாராணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.