தமிழ்நாடு செய்திகள்

அமலாக்கத்துறை சார்பில் 93 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது தொடுக்கப்படுகின்றன- செல்வப்பெருந்தகை

Published On 2025-04-29 12:11 IST   |   Update On 2025-04-29 12:11:00 IST
  • தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.
  • அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். இந்தப் பின்னணியில் அமலாக்கத்துறை தொடுக்கிற வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகின்றன. இதில் தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதன்மூலம் அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில் டெல்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News