முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததால் சர்ச்சை - ரவிக்குமார் எம்.பி. கண்டனம்
- தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை
- ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை
வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ' வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்துள்ளார்.