மரங்களை காப்பாற்ற ஆகஸ்டு 17-ந்தேதி மாநாடு: சீமான்
- தி.மு.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறது.
- தேர்தல் வரும்போது மட்டும் எப்படி தி.மு.க.வுக்கு மக்கள் மீது திடீர் திடீரென்று காதல் வருகிறது.
திருச்சி:
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
உங்களோடு ஸ்டாலின் திட்டம் மூலமாக ஒரு அரசு தனது அரசு எந்திரத்தை முழுமையாக தேர்தல் பரப்புரைக்கு, கட்சி வேலைக்கு பயன்படுத்துகிறது.
தி.மு.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறது.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னார்கள். வென்று ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு என கூறினார்கள். இப்போது தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும் நிலையில் விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை தருவோம் என்று சொல்கிறார்கள்.
தேர்தல் வரும்போது மட்டும் எப்படி தி.மு.க.வுக்கு மக்கள் மீது திடீர் திடீரென்று காதல் வருகிறது. பள்ளம் மூடப்படுகிறது?. சாலை போடப்படுகிறது.
உங்களோடு முதல்வர் என பல திட்டங்களை கொண்டு வரும் தி.மு.க. அரசின் முதல்வர் இதுவரை எங்கே இருந்தார்?
50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க. பா.ஜ.க.வை பார்த்து எதற்கு பயப்பட வேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது முந்தைய நிலைப்பாடு. இப்போது மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்று மாறி உள்ளது.
எங்களுக்கு பல்லாயிரம் வழிகாட்டிகள் இருக்கிறார்கள். பெரியார் எங்களுக்கு தேவையில்லை.
அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 17-ந்தேதி மரங்கள் மாநாடு நடத்த இருக்கிறோம். மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காக பேசுவோம். மரம் மண்ணின் வளம். மரம் நடுவது மனிதனின் அறம் என்பது எங்களுடைய கொள்கை.
ஆடும் மாடும் இல்லாமல் ஒரு நாடு எப்படி வளம்பெறும். உயர்திணை சரியாக வாழ வேண்டும் என்றால் அகர்தினை வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.