தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
- அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.