தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.விடம் பிரேமலதா வைத்த 3 நிபந்தனைகள்- தே.மு.தி.க.வுக்கு தேர்தல் கணக்கு கை கொடுக்குமா?

Published On 2025-08-01 12:42 IST   |   Update On 2025-08-01 12:42:00 IST
  • விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது.
  • 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை நேரில் சந்தித்தது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. முக்கியமாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்பப்படுகிறது .

உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய முதலமைச்சரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், ஏற்கனவே விஜயகாந்த் உடல்நலம் பாதித்து இருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். எனவே அந்த நட்பின் அடிப்படையில் இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று பிரேமலதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க.முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றதும், தி.மு.க. தரப்பிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அது மட்டுமல்ல ஏற்கனவே தே.மு.தி.க வை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்துள்ளார்கள். எனவே தான் இந்த சந்திப்பை கூட்டணிக்கான அச்சாரமாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். திடீரென்று தி.மு.க. பக்கம் பிரேமலதாவின் பார்வை திரும்பியது ஏன்? என்பது பற்றி விசாரித்த போது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது :-

கடந்த 2005-ல் கட்சி தொடங்கப்பட்டு 2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது. ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

கட்சி ஆரம்பித்த மறு ஆண்டு அதாவது 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர் தனித்து போட்டியிடும் முடிவை மாற்றி 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் முறையாக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் அப்போதுதான் தே.மு.தி.க.வுக்கு கிடைத்தது

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட அப்போது தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போனது அரசியல் களத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதை வைத்து அடுத்து வரும் காலம் விஜயகாந்த் காலம் தான் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு கட்சி எடுத்த முடிவுகள் கை கொடுக்காததால் 8 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி சுமார் ஒரு சதவீதம் என்ற அளவுக்கு இறங்கி விட்டது.

2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை அமைத்து ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா, ஆகிய 2 மாபெரும் ஆளுமைகளும் சந்தித்த கடைசி தேர்தலும் அதுதான். அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. எடுத்த முடிவு கை கொடுக்கவில்லை. 60 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் போனது.

விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கும் இருந்தது. அப்படி இருந்தும் கட்சியை சிகரம் தொட கொண்டு செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் தான் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா பொதுச்செயலாளர் ஆனார். மீண்டும் கட்சியை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இந்த நிலையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் கூட்டணி ஒப்பந்தப்படி தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி தருவதாக கூறப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மோசமான தோல்வியை தழுவியது. இதையடுத்து பேசியபடி மேல் சபை எம்.பி. பதவியும் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்படவில்லை. அடுத்து வரும் வாய்ப்பில் உறுதியாக தரப்படும் என்று அ.தி.மு.க. உறுதி அளித்துள்ளது. இது பிரேமலதாவை அதிருப்தி அடைய வைத்தது. அவரது தம்பி எல்.கே.சுதீசை மனதில் வைத்தே எம்.பி. பதவி கேட்கப்பட்டதாகவும் அது நடக்காமல் போனது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியதாகவும் கூறுகிறார்கள்.

எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் சொதப்பி விடக்கூடாது என்று நினைக்கிறார். எனவே தான் தேசிய ஜனநாயக கூட்டணியை இனியும் நம்பி பலனில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஐக்கியமாகி விடலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கூட்டணியில் இடம் பெற்றால் மட்டும் போதாது. நினைத்த பேரத்தை முடிக்க வேண்டும் என்றால் கட்சியின் பலத்தையும் காட்ட வேண்டியது அவசியம். எனவே கட்சி இன்னும் பலமாக தான் உள்ளது என்பதை காட்டுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.வை தொடர்ந்து பிரேமலதாவும் ரத யாத்திரை செல்ல உள்ளார். தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருந்தாலும் மேலும் கட்சிகளை இணைத்து கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை தக்க வைப்பதில் தி.மு.க. தலைமை தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தான் தே.மு.தி.கவையும் கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளது. கூட்டணியில் சேர்வதற்கு பிரேமலதாவும் பெரிய அளவில் பேரம் எதையும் பேசவில்லை . மூன்றே மூன்று கோரிக்கை மட்டும் தான் அவர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் கோரிக்கை மேல்சபை எம்.பி பதவி ஒன்று கட்டாயம் வேண்டும். இரண்டாவதாக சட்டமன்றத் தேர்தலில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். மூன்றாவதாக தேர்தல் செலவுகளை தி.மு.க. ஏற்க வேண்டும் என்பதுதான்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் தி.மு.க.வும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் தி.மு.க.வில் கிடைக்கும் என்று பிரேமலதாவிடம் உறுதியும் அளித்துள்ளார்கள். எனவே விரைவில் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் பிரேமலதா போடுவது தேர்தல் கணக்கு மட்டும் தான். அதேநேரம் தனது கணவர் தொடங்கி உச்ச நிலைக்கு கொண்டு சென்ற கட்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கும் நிலையில் மீண்டும் தனது தலைமையில் வழி நடத்தி கட்டி காப்பதில் பிரேமலதா சாதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

Tags:    

Similar News