மாவட்ட செயலாளர் பதவி மறுப்பு - விஜய் காரை முற்றுகையிட்ட தூத்துக்குடி பெண் நிர்வாகி!
- சார் சார் என அழைத்தும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்
- கட்சிக்காக நீண்டநாட்கள் உழைத்ததாக கூறும் அஜிதா
சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் காரை, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா. இவர் விஜய் கட்சி தொடங்கியவுடன் தவெகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் தனக்கு அந்தப் பதவியை வழங்கவேண்டும் என அஜிதா கோரியதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அஜிதா காலையிலிருந்து கண்ணீருடன் பனையூர் அலுவலகத்தின் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் விஜய் அலுவலகத்திற்கு வர, அவரிடம் பேசவேண்டும் என அவரது காரை மறிக்க முயன்றார். ஆனால் விஜய்யின் பவுன்சர்கள் அவரை தடுத்து உடனே அப்புறப்படுத்தினர். பின்னர் விஜய்யின் கார் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அங்கு போய் விஜய்யை சந்திக்கலாம் என கேட்ட போதும் அஜிதாவுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
தவெகவில் விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நியமிக்கப்படுகின்றனர். இதனால் விஜய் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுவிட்டு அவர் வெளியே வரும் வரை நான் காத்திருப்பேன் என அஜிதா அங்கேயே நின்று கொண்டிருக்கிறார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.