தமிழ்நாடு செய்திகள்

தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை- சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தல்

Published On 2025-05-07 15:14 IST   |   Update On 2025-05-07 15:14:00 IST
  • வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு புதிய நிர்வாகிகள் கட்சியினரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்த தே.மு.தி.க. மேல்-சபை எம்.பி. பதவி தொடர்பாக அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கூட்டணியில் இருந்து சற்று விலகியே இருந்து வருகிறது.

இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? இல்லை தி.மு.க. கூட்டணி அல்லது விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களுடன் 4 துணைச் செயலாளர்களும் மாநில அளவிலான பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதேபோன்று மாணவரணி, தொண்டரணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, மீனவர் அணி உள்பட 16 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் மாநில அளவில் ஒரு செயலாளர் மற்றும் நான்கு துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இப்படி புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் 110 பேர் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு புதிய நிர்வாகிகள் கட்சியினரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே பொறுப்பில் உள்ள பழைய நிர்வாகிகள், மூத்த மாவட்ட செயலாளர்கள் ஆகியோரையெல்லாம் அனுசரித்து தே.மு.தி.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா வலியுறுத்தி இருக்கிறார். தே.மு.தி.க. பொருளாளரான எல்.கே. சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோரும் கூட்டத்தில் பேசினார்கள். அவர்களும் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகரன் பேசும் போது, தே.மு.தி.க. இளைஞர் அணியை பலப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் விரைவில் இதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். புதிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணியளவில் தொடங்கி 2 மணி நேரம் வரையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்குவதற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா முடிவு செய்திருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News