'ரோடு- ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு- பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் அன்புமணி ராமதாஸ்
- தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்து ரையாடுகிறார்.
- பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட 10 உரிமைகளை வலியுறுத்தி 'உரிமை மீட்க, தலைமை காக்க' என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் தனது பிரசார நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலையில் நெல்லைக்கு வரும் அன்பு மணி ராமதாஸ் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அன்புமணி ராமதாஸ் மாலையில் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் வரும்போது அவரை வரவேற்கும் விதமாக அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரையிலும் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு நெல்லை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை யில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி ராமதாஸ் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் பொதுக்கூட்டத்தை பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.