தமிழக பா.ஜ.க தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்- நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
- ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபட்டது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.
இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபட்டதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார்.
இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை வழங்கினார். நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செயயப்படவில்லை.
இதனால், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.