'நீட்' விலக்கு விவகாரம்: இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க.
- மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், 4 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்துசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
- இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை.
சென்னை:
சட்டசபையில் கடந்த 4-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 'நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை. இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களிடமும் கலந்தாலோசிக்கப்படும். மேலும், இதுதொடர்பாக அனைத்து சட்டசபை கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனை கூட்டம் வரும் 9-ந்தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
இதற்கிடையே 'நீட்' விலக்கு குறித்து தமிழக அரசு கூட்டியுள்ள சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2026-ல் தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், 4 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்துசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக சட்டமன்றக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, தி.மு.க. அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது' என்று கூறியுள்ளார்.