கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம்- அமைச்சர் சக்கரபாணி
- அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.
- எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி மற்றும் நத்தத்தில் தி.மு.க. சார்பில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வேடசந்தூரில் செயற்பொறியாளர் மின் கோட்ட அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் நானும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டோம். இந்த விழாவில் கலந்து கொண்டு வந்தபிறகு, அ.தி.மு.க.வினர் வெளியிட்ட அறிக்கையை பார்த்த பிறகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்ட சம்பவமே எனக்கு தெரியவந்தது. இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தி.மு.க. என்றுமே செய்யாது. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப்பைகளில் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் அந்த படங்கள் அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள். அவர்களது படங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பள்ளி மாணவர்களுக்கு அந்த பைகளை கொடுங்கள் என்றார். இதனால் அவர் வழியில் வந்த நாங்கள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம். எல்லோரையும் நாங்கள் மதிக்க கூடியவர்கள். அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.
தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளை மட்டும் பார்க்கக்கூடாது. 234 தொகுதிகளும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. இதனால் நாங்கள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் நத்தத்தில் இன்று அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் தனது தொகுதிக்கு அரசு கல்லூரியை கொண்டு வர முடியாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.