பொறுப்பு டி.ஜி.பி. பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை கிடையாது- அமைச்சர் ரகுபதி ஆவேசம்
- தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான்.
- கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தான் பா.ஜ.க. அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை காப்பாற்றி வருகிறார்.
அது டி.ஜி.பி. விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பா.ஜ.க. அரசு அது டி.ஜி.பி. மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் டி.ஜி.பி. மூலம் நடக்க முடியவில்லை.
தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான். 2011-ம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டி.ஜி.பி. ஆகவும், சட்ட-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் அ.தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது.
ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டி.ஜி.பி.யாக கொண்டு வந்ததும் அ.தி.மு.க. தான். தற்போது இதை பற்றி பேசி பா.ஜ.க. அரசின் விசுவாசி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டு வருகிறார். பொறுப்பு டி.ஜி.பி. பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.
அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கோலமாக கடந்த சட்ட ஒழுங்கை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக கொண்டு வந்துள்ளது.
கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும். சென்னையில் சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. எங்களுக்கு எந்த அளவு போட வேண்டும் என்பது சரியாக தெரியும். யார் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். போலியான தருணங்களை சொல்லி நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.