தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பி.எஸ்., பிரேமலதா சந்தித்ததன் பின்னணி என்ன? - அமைச்சர் விளக்கம்

Published On 2025-08-02 12:53 IST   |   Update On 2025-08-02 12:53:00 IST
  • பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள்.
  • மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விவரம் வருமாறு:-

கேள்வி: பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்தனர். இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா? இதன் பின்னணி ஏதேனும் உள்ளதா?

பதில்: பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.

கேள்வி: பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?

அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்ம ஊருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. இதை தலைவர்கள் தான் அணுக வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு முகாம்களை முதல்வர் நடத்தி வருகிறார். இப்போதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது, அது முடிவதற்குள்ளேயே இன்னொரு மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார். என்னால் இப்போதைக்கு அதிகமாக பேச முடியாது ஏனென்றால் எனக்கு சற்று உடல் நலம் சரியில்லை என பேசினார்.

Tags:    

Similar News