தமிழ்நாடு செய்திகள்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு- கைதான 5 போலீஸ்காரர்களுக்கு 2 நாட்கள் சி.பி.ஐ. காவல்

Published On 2025-08-05 13:52 IST   |   Update On 2025-08-05 13:52:00 IST
  • அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
  • சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்வபாண்டி, கைதாகியுள்ள 5 போலீஸ்காரர்களுக்கு இன்று, நாளையும் என 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நாளை மாலை 5.30 மணிக்கு மீண்டும் 5 போலீஸ்காரர்களை ஆஜர்படுத்த வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரையும் விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News