விஜய் பக்கம் மக்கள் இருப்பதால் த.வெ.க.வில் இணைந்தேன்- கு.ப.கிருஷ்ணன்
- 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி.
- தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் குழு மணி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன். 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோதே அதில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்களின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டு தன்னை முன்னிலைப்படுத்திய அவர், எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்த போது ஜெயலலிதா அணியில் இடம் பெற்றார்.
கடந்த 1991-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வேளாண்மை துறை அமைச்சரானார். பல்வேறு மனக்கசப்புகளால் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய அவர் 2001-ல் தமிழர் பூமி என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனாலும் அதன் செயல்பாடுகள் நீடிக்கவில்லை.
அதன் பின்னர் தே.மு.தி.க.வுக்கு சென்ற கு.ப.கிருஷ்ணன், மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைந்தார். கட்சியும் அவரை ஏற்றுக்கொண்டு 2011 சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்.சின் கை ஓங்கும் என்ற நம்பிக்கையில் அவரது தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இணைந்து செயல்பட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி மவுனம் காத்த அவர் நேற்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எவ்வளவோ முயற்சிகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டும் கடைசி வரை அது நிறைவேறவில்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்த அளவுக்கு அ.தி.மு.க. பா.ஜ.க.விடம் அடிபணிந்துள்ளது.
ஆனால் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை தனது கூட்டங்களில் பயன்படுத்துகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என்று எங்கள் தலைவர்களை உயர்த்தி பிடித்து பேசுகிறார். அவர்களை போன்ற பெரிய தலைவர்களுடன் பணியாற்றிய எனக்கு விஜய்யுடன் பணியாற்றுவதில் எந்த நெருடலும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் எந்த பக்கம் இருக்கிறார்களோ அந்தப்பக்கம் தான் நாமும் இருக்க வேண்டும். மனதில் இருப்பதை சொல்லி நிறைவேற்ற முடியும் என கருதுகிறேன். வேறு எனக்கு பதவி ஆசை கிடையாது என்றார்.
தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க.வும் வலுவான கூட்டணி அமைத்துள்ளதே எனக் கேட்டதற்கு, நீங்களும், நானும் இங்கே தான் இருப்போம். களத்தில் வேடிக்கை பார்ப்போம். 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.