தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல்: முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோ வைத்திருந்தவரை கைது செய்ய தடை- ஐகோர்ட் கிளை

Published On 2025-10-18 13:52 IST   |   Update On 2025-10-18 13:52:00 IST
  • எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
  • மனுதாரரை வருகிற 22-ந்தேதி வரை கைது செய்யக்கூடாது.

மதுரை:

நெல்லை அலவந்தான் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வின் அந்தோணி, தனக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழக முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு ஏற்றம் செய்திருந்தனர். அந்த வீடியோ எனக்கும் வந்திருந்தது. இந்த சர்ச்சைக்குரிய மிரட்டல் வீடியோவை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் டேக் செய்து வைத்திருந்தேன். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். அந்த வீடியோவை நான் எடிட் செய்து பதிவேற்றம் செய்யவில்லை. எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் எஸ்.சதீஷ், பி.மோனிடா கேத்தரின் ஆகியோர் ஆஜராகி, இந்த வீடியோ பதிவேற்றம் செய்த நடவடிக்கைக்கும் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு மனுதாரர் வழங்குவார். மேலும் கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கும் மனுதாரர் கட்டுப்படுவார் எனவே அவருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதாடினர்.

அதைத் தொடர்ந்து, மனுதாரரை வருகிற 22-ந்தேதி வரை கைது செய்யக்கூடாது. இந்த மனு குறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News