தமிழ்நாடு செய்திகள்

நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள்... இறந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள்... நீதிபதிகள்

Published On 2025-10-03 13:41 IST   |   Update On 2025-10-03 13:41:00 IST
  • கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநலனே முக்கியம்.
  • பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அவசியம் தானே.

மதுரை:

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யை பார்க்க கரூரில் வெகுநேரமாக மக்கள் கூடியிருந்து உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்து உள்ளனர். சிறிது நேரத்தில் அந்த இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் சிசிக்சை பலனின்றி பலர் இறந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசார கூட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் மக்கள் துயரத்தை சந்தித்ததாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இருந்தபோதும் த.வெ.க.வின் முறையான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்ட பிரசாரத்தின் காரணமாகவே பலர் இறந்து இருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் என தமிழக முதலமைச்சர் நிவாரணத்தொகை அறிவித்து உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை போதுமானதாக இருக்காது.

எனவே இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள்தான் இத்தனை பேர் இறப்பதற்கு காரணம் என்பதால் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல கரூர் மாவட்டம் தாந்தோணி மலையைச் சேர்ந்த வக்கீல் தங்கம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது மிகப்பெரிய துயர சம்பவம். பொதுவாக மத விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், பேரணிகள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளில் அதிக அளவிலான மக்கள் பங்கேற்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எதிர்பாராத சூழ்நிலைகளை உருவாகக்கூடும். அதுபோலத்தான் கரூர் சம்பவமும் நடந்து உள்ளது.

அந்த வகையில் கரூர் பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ததில் இருதரப்பினரும் முறையாக ஆலோசிக்கவில்லை என்பது தெரிகிறது. இது போன்ற விபத்துகளை தவிர்க்க அதிக அளவில் கூடும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு என பொதுவான விதிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை.

எனவே தமிழ்நாட்டில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளையும், விரிவான வழிகாட்டுதல்களையும், விதிகளையும் உருவாக்க தமிழக அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல் செந்தில் கண்ணன் உள்பட மொத்தம் 7 மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன் ஆகியோர் முன்பு பகல் 11.50 மணி அளவில் தொடங்கியது.

இதில் மனுதாரர் தரப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எழுப்பப்பட்ட வாதத்திற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு தரப்பில், இந்த தகவல் அறிந்த உடன் முதலமைச்சரும் உடனுக்குடன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அன்றைய தினம் இரவில் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். கரூரில் 41 பேர் இறந்தது சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர்.

மேலும் உரிய வழிகாட்டுதல்களை டி.ஜி.பி. பிறப்பித்து இருந்தார். அதில் 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில் எதையுமே த.வெ.க.வினர் பின்பற்றவில்லை.

பிரசாரம் செய்வதற்கு 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால் அந்தப்பகுதியில் திரண்டி ருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட சோர்வு உயிரிழப்புகளுக்கு காரணமாகி விட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. உடனே நீதிபதிகள் பிரசாரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதி மாநில சாலையா? அல்லது தேசிய நெடுஞ்சாலையா? எதன் அடிப்படையில் அந்தப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது?

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநலனே முக்கியம். பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அவசியம் தானே. அரசின் பாதுகாப்பு அமைப்புகள் முறையாக செயல்பட வேண்டும். மக்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பொதுமக்களின் உயிரை காப்பது அரசின் கடமை என்றனர்.

இதற்கிடையே த.வெ.க.வினர் தங்கள் தரப்பில் கருத்துக்களை முன்வைக்கும்போது கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். எனவே இதனை கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வாதாடினர்.

கரூரில் பரப்புரை மேற்கொள்ள நாங்கள் கேட்ட இடத்தில் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் குண்டர்கள் சிலர் புகுந்து ரகளை செய்தார்கள். காலணிகளும் வீசப்பட்டன. காவல்துறை தரப்பில் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று வாதிட்டனர்.

அப்போது அரசு தரப்பில் விதிகளை வகுக்கும் வரை எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றனர். இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள் நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் கூட்டம் நடத்தலாம் என உத்தரவிட்ட னர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் த.வெ.க. ஆதரவாளர் கே.எல்.ரவி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். ஆரம்ப நிலையிலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு எப்படி மாற்ற முடியும்? விசாரணையில் திருப்தி இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரலாம். மேலும் மனுத்தாக்கல் செய்தவர் பாதிக்கப்பட்டவரா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் எப்படி உத்தரவிட முடியும்?

நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள். கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு இழப்பீடு மற்றும் இழப்பீடு அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அரசு தரப்பில் இருந்து 2 வார காலத்திற்குள் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News