தமிழ்நாடு செய்திகள்

சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியலில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்- ஜெயக்குமார்

Published On 2025-11-20 13:10 IST   |   Update On 2025-11-20 13:12:00 IST
  • ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
  • வாக்காளர் திருத்தப்பட்டியலை சீரழிக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் ஆளும் தி.மு.க. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியது. இதனை கண்டித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என். ரவி, ஆதிராஜாராம், வி.எஸ்.பாபு, தி.நகர் சத்தியா, ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் தி.மு.க.வினர் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள ஆணையர், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி நடக்கவில்லை. இதுபோல் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு எதிராக நடைபெறும் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியலை அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த ஜனநாயக முறைப்படியிலான வாக்காளர் திருத்தப்பட்டியலை சீரழிக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. அதனை அதி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது.

அண்மைக்காலமாக தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியல்களில் 20 ஆண்டுகளாக முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே, சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியலை அ.தி.மு.க. ஆதரித்ததே தவிர, பா.ஜ.க. ஆதரிப்பதால், அ.தி.மு.க. ஆதரிக்கவில்லை.

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம். நியாயமான முறையில் நடக்கவில்லை என்றால் இன்னும் 6 மாதத்தில் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பா.வளர்மதி, கோகுல் இந்திரா மற்றும் ராயபுரம் மனோ, தென் சென்னை மாவட்ட அவைத் தலைவர் தி.நகர் சுவாமி நாதன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் மாவட்ட இணை செயலாளர் ஆவின் அருள்வேல், லட்சுமி நாராயணன், பெரும்பாக்கம் ராஜசேகர், சைதை சொ.கடும் பாடி, எம்.என்.இளங்கோ, பகுதி செயலாளர் துறைமுகம் பயாஸ், ரோலக்ஸ் ஆர்.இஸ்மாயில், பட்மேடு டி.சாரதி, புரசை எம்.கிருஷ்ணன், சேவியர், வி.சுகுமார், ஜி.ஆர்.சதீஷ் குமார், வில்லிவாக்கம் ஜெய், சுரேஷ், பாலசுப்பிர மணியன், வில்லிவாக்கம் பிரபு காந்த், கேட்டரிங் ரமேஷ், எம்.ஆர். சந்திரன், ஜெய செல்வகுமார், வழக்கறிஞர் அருண், வட்ட செயலாளர் உதய வெற்றி, எழும்பூர் சரவணன், எம்.குமரவேல், எம்.பெருமாள், பி.சிவக்குமார், எழும்பூர் ஆர்.ரமேஷ், சேத்துப்பட்டு பிரகாஷ், நா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, சி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக்அலி, வழக்கறிஞர் சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் சரவணன், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, செயல் மோகன், பூவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News