தமிழ்நாடு செய்திகள்

ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா?- நயினார் நாகேந்திரன்

Published On 2025-10-06 21:13 IST   |   Update On 2025-10-06 21:13:00 IST
  • தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 169-ஐ கைகழுவியது ஏன்?
  • அடுத்த தலைமுறையின் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

திமுக ஆட்சி அமைத்தால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலையில் பால் வழங்கப்படும் என்று தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 169-ஐ கைகழுவியது ஏன்?

இது போதாதென்று, மாணவர்களின் பசியைப் போக்கி ஊட்டச்சத்தை மேம்படுத்த வேண்டிய காலையுணவில் புழுக்களையும் பல்லிகளையும் நெளியவிட்டு, மதிய உணவில் வழங்க வேண்டிய முட்டையை வெளிச்சந்தையில் விற்று, ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா?

மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு பதில், அதே பணத்தைக் கொண்டு மாணவர்களுக்குப் பால் வழங்கி ஊட்டச்சத்தை மேம்படுத்தியிருக்கலாமே!

கொடுத்த வாக்குறுதியைக் கிடப்பில் போட்டு, ஊழல் புரிந்து, தமிழக மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடிவிட்டு, "அப்பா" என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவது என்றும் நியாயமில்லை! அடுத்த தலைமுறையின் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தமிழக மக்கள் அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News