தமிழ்நாடு செய்திகள்

NDA கூட்டணிக்கு அழைத்தால் சேருவீர்களா? - பிரேமலதா விளக்கம்

Published On 2026-01-21 15:04 IST   |   Update On 2026-01-21 15:04:00 IST
  • நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள்.
  • தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன்.

சென்னை:

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். கூட்டணியை பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. கூட்டணி தொடர்பாக உங்கள் முடிவு என்ன என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: எங்கள் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள்தான் காத்திருக்கிறீர்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். உங்களை நான் அழைத்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். பியூஷ் கோயல் வந்திருப்பதாகவும் எங்களுடன் பேச இருப்பதாகவும் நீங்கள்தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை. இது தான் உண்மை.

எங்களுக்கு அப்படி ஒரு செய்தி இந்த நிமிடம் வரை வரவில்லை. எங்களை யாரும் அணுகவும் இல்லை. தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை. பியூஷ் கோயல் எதற்காக வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. கூட்டணி தொடர்பாக முடிவு எடுத்தால் முதலில் உங்களை கூப்பிட்டு தெரிவிக்கிறேன்.

கேள்வி: யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

பதில்: நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை மறுநாள் (23-ந்தேதி) பிரதமர் வருகிறார் என்பதை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி சார்பான கூட்டமா அல்லது கூட்டணி தொடர்பான கூட்டமா என்பது கூட தெரியவில்லை.

தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன். வருகிற 24-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 4-ம் கட்ட பயணத்துக்கு நாங்கள் கிளம்புகிறோம். அந்த பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்.

கேள்வி: கூட்டணி குறித்து நாங்கள் உறுதி செய்து விட்டோம். உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்தீர்களே?

பதில்: எங்கள் கட்சிக்குள் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். அவர்களின் கருத்துக்களை கேட்டு இருக்கிறேன். அவர்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணி குழப்பத்தில் உள்ளதா?

பதில்: பா.ஜ.க. தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் பதில் இல்லை.

கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அழைத்தால் சேருவீர்களா?

பதில்: நடக்காத ஒரு விஷயத்துக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

கேள்வி: பியூஷ் கோயல் அழைத்தால் சந்தித்து பேச தயாராக இருக்கிறீர்களா?

பதில்: இதுவரை அழைக்கவில்லை. அப்படி வந்தால் உங்களுக்கு சொல்கிறேன். பிரதமர் மோடி நாளை மறுநாள் (23-ந்தேதி)தான் வருகிறார். அன்றைக்கு பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News