தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழுவில்,"அதிகாரம்'' என்ற போலி சட்டையை அணிந்திருக்கிறார் இ.பி.எஸ்- ஆர்.எஸ்.பாரதி

Published On 2025-12-10 15:42 IST   |   Update On 2025-12-10 15:42:00 IST
  • அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.
  • எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.

எடப்பாடி பழனிசாமி, பயத்தை போக்க டோப்பட்ட மேக் அப் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.

10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளன.

"கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்" என்ற தீர்மானம் பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.

அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு இரண்டு நாள் முன்புகூட குஜராத்தில் பேசிய அமித்ஷா, ''பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார். "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற வசனம் போல மாப்பிள்ளை பழனிசாமிதான்.

ஆனால், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதுதான் அமித்ஷா சொன்ன வார்த்தையின் அர்த்தம். ஆனால், அதிமுக பொதுக்குழுவில், "அதிகாரம்'' என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள்.

அமித்ஷா அழைப்பின் பேரிலே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கார்கள் மாறி அமித்ஷாவை சந்தித்தும், முகமூடி அணிந்து வெளி வந்ததையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அந்த அமித்ஷா சொல்வதை மீறி எதையுமே எடப்பாடி பழனிசாமியால் செய்ய முடியாது என்பது அதிமுகவினருக்கே நன்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.

மெகா கூட்டணி அமைப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்த கட்சியும் வர தயாராக இல்லை; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு எந்த ஆளுமையும் இல்லை; மக்கள் செல்வாக்கும் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாக உணர்ந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணியை அவரே அறிவித்தார் என்பதுதானே நிஜம்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகிறார்கள். அதற்காக அமித்ஷாவை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாத தொடைநடுங்கி எடுபுடி பழனிசாமிக்குதான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் என்பது மிக சிறந்த நகைச்சுவை.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பாஜக நிராகரித்துவிட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசைக் கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, திமுக அரசைக் கண்டித்திருப்பது பச்சைத்துண்டு அணிந்துகொண்டு பச்சைதுரோகம் செய்யும் போலி விவசாயி பழனிசாமி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.

உண்மையான விவசாயியாக இருந்தால் பிரதமரை டெல்லி சென்று சந்தித்து 22 சதவீதம் வரை உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கினால்தான் கூட்டணியில் தொடருவோம் என நிபந்தனை விதிக்க ஆளுமை வேடம்போடும் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியும் இருக்கிறதா?

கோவை, மதுரை நகரங்களின் மெட்ரோ திட்டங்களை ரத்து செய்த மோடி அரசை கண்டிப்பதற்கு பதில், ஒன்றிய பாஜக அரசு கூறிய மொக்கையான காரணத்தையே அதிமுக பொதுக்குழு தீர்மானத்திலும் நியாயப்படுத்தி கோவை, மதுரை மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துவரும் வளர்ச்சியை தினந்தோறும் பார்த்து வயிற்றெரிச்சலில் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, போகின்ற இடங்களிலெல்லாம் புலம்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையே அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களாகவும் வடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடன் சுமை கட்டுக்குள் இருப்பதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 1,01,349 கோடி ரூபாய்தான். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நிறைவடையும்போது 2021ம் ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் 4,80,300 கோடி ரூபாய். அதாவது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமார் 5 மடங்கு அதாவது கிட்டதட்ட 500 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் திமுக ஆட்சியில் தற்போது 9 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்தாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 93 சதவீதம் அளவிற்கே கடன் உயர்ந்துள்ளது.

ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிஎஸ்டிபியை ஒப்பிடும்போது கடன் அளவு எவ்வளவு என்பதுதான் கடன் சுமையை தீர்மானிக்கும் காரணி. அந்த வகையில் தமிழ்நாட்டின் DEPT TO GSDP RATIO 26.4 சதவீதம்தான். தமிழ்நாடு நிதி பொறுப்புச் சட்டம் 2003 நிர்ணயித்த கடன் வரம்பைவிட குறைவான அளவில்தான் தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது.

"முதலீடுகள் இல்லை, நிறுவனங்கள் இடம் பெயர்கின்றன, வேலை வாய்ப்பு இல்லை, ஏமாற்றும் புள்ளி விவரங்கள்" என பொத்தாம் பொதுவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அதிமுக, தனது ஆட்சிக்காலத்தில் இவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன; அதிலிருந்து திமுக ஆட்சியில் இவ்வளவு கோடி குறைவாக உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'இந்த' நிறுவனம் தற்போது வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது, அதிமுக ஆட்சியில் இத்தனை இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம்; தற்போது அதைவிட குறைந்த வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு கூறியிருந்தால் முதலீடு ஈர்ப்பு, தொழில் வளர்ச்சி விஷயத்தில் அதிமுக ஆட்சியின் யோக்கியதை தெரிந்துவிடும் என்பதால் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது அதிமுக.

2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 15,543 கோடி ரூபாய் முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு; அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல் கட்டமாக 46 தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கிவிட்டன. அதனால்தான் தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வளர்ச்சியை பழனிச்சாமியால் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒன்றிய பாஜக அரசு வழங்கிய புள்ளி விவரத்தையே "பொய்யான புள்ளி விவரம்" என்று கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் நீதித்துறையின் மதச்சார்பின்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடம்பிடிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்பட 120 மக்களவை எம்.பிக்கள் ஆதரித்துள்ளனர்.

ஆனால் மற்ற மாநிலங்களில் மதக் கலவரம் செய்தே ஆட்சியை மாற்ற பாஜக முயற்சி செய்து பலனடைந்ததால் தமிழ்நாட்டிலும் அந்த பலனை அறுவடை செய்யலாம் என்ற நப்பாசையில் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கலவர அரசியலுக்கு துணை போகும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது; தீபம் ஏற்றிவிட்டதை மறைத்து, தீபமே ஏற்ற அனுமதி மறுக்கிறது திமுக அரசு என்று அவதூறு பரப்பும் மதவெறி கும்பலுக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மதசார்பின்மைக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. 40 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. மொத்தமாக 404 திட்டங்கள் அரசின் செயல்பாட்டில் உள்ளன. 37 திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் மட்டுமே இன்னும் அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத திட்டங்களாக உள்ளன.

தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சொல்லியது மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவதாலேயே எடப்பாடி பழனிசாமி பொய்யையும் அவதூறையும் பரப்பி ஆதாய அடைய முயற்சிக்கிறார்.

பாஜகவின் மதவெறி கொள்கைக்கு எதிரியாக இருப்பது திமுக மட்டுமல்ல தமிழ்நாடே என்பதால் தமிழ்நாட்டுக்கு துரோகத்தையும் வஞ்சகத்தையுமே மட்டுமே ஒன்றிய பாஜக அரசு துணிந்து செய்கிறது. அப்படியிருந்தும் பாஜகவுடன் கூட்டணிவைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News