தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்- தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை தொடக்கம்
- ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார்.
- அடுத்த மாதம் ஜனவரி 10-ந்தேதி வரை மாநிலம் தழுவிய வகையில் தீவிரமான பிரசாரமாக இது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வாக்குச்சாவடியை வென்றால் சட்டமன்ற தொகுதியை வெல்லலாம். அதற்காக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரசாரம் தொடங்கப்படுகிறது. அவரவர் வீடு அருகே உள்ள வாக்குச்சாவடியில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் எனது வாக்குச்சாவடி பகுதியில் கலந்து கொள்வேன் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார்.
அந்த பாகத்தில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், பி.எஸ்.ஏ.-2 முகவர்கள், வட்டச் செயலாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டக் கழக செயலாளர் மயிலை த.வேலு, பகுதிச் செயலாளர் நந்தனம் மதி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
இதைபோல் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பரப்புரையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்றனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களையும் சரி பார்த்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 463-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளதால் அத்தனை வாக்குச்சாவடிகளிலும் வெற்றி பெறுவதற்காக இந்த பரப்புரை இன்று மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த மாதம் ஜனவரி 10-ந்தேதி வரை மாநிலம் தழுவிய வகையில் தீவிரமான பிரசாரமாக இது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 6.8 லட்சம் தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் உற்சாகப்படுத்தவும் அணி திரட்டவும் இந்த பிரசார வியூகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாக கலந்துரையாடல்கள், வாக்காளர் சரிபார்ப்பு என வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மக்களை கவரும் வகையில் தி.மு.க.வினரின் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னோடி தலைவர்கள் உள்பட அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றி காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.