சிபிஎம் இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா? - ராகுல்காந்திக்கு சண்முகம் கேள்வி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆர்.எஸ்.எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.
- மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி இயற்கை எய்தினார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டார்.
அவர் உம்மன்சாண்டியின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆர்.எஸ்.எஸ் உடன் ஒப்பிட்டு, இரண்டும் ஒரே கருத்தியலில் செயல்படுவது போல் உள்ளது என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இக்கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மதவெறி பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.