தமிழ்நாடு செய்திகள்

அம்பேத்கர் பற்றிய பேச்சு அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2024-12-19 11:05 IST   |   Update On 2024-12-19 11:05:00 IST
  • இன்று மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.
  • அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது.

அதன்படி சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை வழங்கி 140 கோடி மக்களும் ஜனநாயக உரிமையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அம்பேத்கரை இழிவு படுத்துகிற பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களின் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News