முதல் மாநாட்டை போல் மதுரை மாநாடும் வெற்றி மாநாடாக அமையும்- புஸ்ஸி ஆனந்த்
- தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும்.
- மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது.
மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் ஆகஸ்ட் 25-ந்தேதி மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.
இதில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு அனுமதி வழங்கும்படியும் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மதுரை 3 மாவட்ட பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்திடம் புஸ்ஸி ஆனந்த் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25-ந் தேதி 2-வது மாநாடு நடத்துவதாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். இன்று காவல்துறையிடம் அனுமதி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு நடத்துவதற்கு விதிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கண்டிப்பாக வெற்றி மாநாடாக இருக்கும். தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை விட 2-வது மாநாட்டில் அதிகளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்தார்.