தமிழ்நாடு செய்திகள்

ராமதாசுடன் அன்புமணி நேரடி மோதல்- சமரச பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு

Published On 2024-12-28 17:50 IST   |   Update On 2024-12-28 17:50:00 IST
  • பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
  • முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி குறித்து பேசினார்.

இதையடுத்து, புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.

நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.

எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.

சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.

பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் நேரடி மோதலால் யாரை ஆதரிப்பது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவிற்கு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்புமணியை வரவழைத்து நாளை பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News