போக்குவரத்து, பொதுத்துறை ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
- நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20-ந்தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு வசதியாக போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கத்தினரின் நலனில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு இதுபோன்று தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தீபஒளித் திருநாளுக்கு குறைந்தது 20 நாள்களுக்கு முன்பாவது இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ஆடைகளை வாங்கி தீபஒளிக்கு தயாராக முடியும்.
வழக்கமாக தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாவது தொழிலாளர்களுக்கு வழங்க இயலும்.
ஆனால், அக்டோபர் 20-ம் நாள் கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் 17 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை; அறிவிப்பும் வரவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசு, மிகை ஊதியம் வழங்குவதிலும் துரோகத்தைத் தொடருமோ? என்று பொதுத்துறை பணியாளர்கள் சந்தேகப்படுகின்றனர். தொழிலாளர்களின் சந்தேகம் சரியானது தான்.
தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அது அடுத்த இரு நாட்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.