தமிழ்நாடு செய்திகள்

சமூகநீதிக்கு திமுக தொடர்ந்து துரோகம் செய்யக் கூடாது!- அன்புமணி ராமதாஸ்

Published On 2025-12-30 12:26 IST   |   Update On 2025-12-30 12:26:00 IST
  • நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்.
  • தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைல்,

தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் திமுக அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் திமுக அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி சர்வேவுக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்; ஆனால், சாதிவாரி சர்வேயை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் பணிச்சுமை, அலைச்சல் ஆகியவை சாதிவாரி சர்வேவுக்கும், நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும் ஒரே அளவிலானவை தான், இன்னும் கேட்டால் சாதிவாரி சர்வே நடத்தும் போது, அதில் எழுப்பப்படும் 70-க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி சர்வே நடத்த வேண்டிய தேவை இருக்காது.

தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு இதை விட 4 மடங்கு அதிகமாக சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். நலத்திட்ட தாக்க சர்வேவுக்கு ரூ.43.52 கோடி செலவாகும் நிலையில், சாதிவாரி சர்வேவுக்கு ரூ. 300 கோடி செலவாகும். இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.

இவை அனைத்துக்கும் மேலாக நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இதே சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி சர்வேயையும் மேற்கொள்ள முடியும். நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வேயை நடத்துவதற்கு இல்லையா? அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மனம் தான் திமுகவுக்கு இல்லை.

சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறது. அதனால் தான் இல்லாத காரணங்களைக் கூறி சாதிவாரி சர்வே நடத்த மறுக்கிறது. ஆனால், சமூகநீதியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள சமூக அநீதி ஆட்சி வீழ்த்தப்பட்டு, சமூகநீதி ஆட்சி அமைக்கப்படும் போது கண்டிப்பாக சாதிவாரி சர்வே நடத்தப்படுவதும், அதனடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உறுதி என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News