செங்கோட்டையன் தொகுதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்- இ.பி.எஸ். பங்கேற்பு
- இபிஎஸ் 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் அலைகடலெனத் திறண்டிருந்து, எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வுகள், அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.
இந்நிலையில்,'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், 30.11.2025 - ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் நாடு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.