விஜயின் பிரச்சார கூட்டத்தில் பற்கேற்க கியூ ஆர் கோட், பாஸ் தேவையில்லை- செங்கோட்டையன்
- பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி.
- விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ் சார்பில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.
இந்நிலையில், ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," விஜயின் பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு கியூ ஆர் கோட், பாஸ் தேவையில்லை.
விஜயின் பிரச்சாரத்திற்கு யார் வேண்ஐமானாலும் வரலாம் பொதுமக்கள் தாங்களாகவே பங்கேற்கலாம், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.