ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உறைபனியுடன் சாரல் மழை - பொதுமக்கள், பயணிகள் அவதி
- பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
- கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் உறைப்பனி கொட்ட தொடங்கியது. இதனால் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பனியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது.
இதனால் ஊட்டியின் வெப்பநிலை நேற்று முன்தினம் மைனஸ் ஒரு டிகிரிக்கு கீழ் சென்றது. இதனால் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, தலைக்குந்தா, கிளன் மார்க்கன், சூட்டிங் மட்டம், பைக்காரா, சாண்டி நல்லா, அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் வெள்ளை நிற கம்பளம் விரித்தாற்போல பனி படர்ந்து காணப்பட்டது.
பகல் நேரங்களில் வெயில் அடித்தபோதிலும் தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் நிழல் தரும் பகுதிகளில் கடுங்குளிரை அதிகமாக உணர முடிந்தது.
அதிலும் குறிப்பாக பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டம்-மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் அவதிக்கு உள்ளாகினர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். உறைபனியின் தாக்கம் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உறை பனியுடன் அவ்வப்போது லேசாக சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் குளிரும் குறையவில்லை. இதனால் அங்கு நேற்று காலை அதிகாலை நேரங்களில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்தது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். அனைத்து சாலைகளிலும் மேக மூட்டம் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர்.
கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் அந்த பகுதியில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிரும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் காணப்பட்டது.
கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக பயணித்தன.
இருப்பினும் சாலையோர வியாபாரிகள், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் மாலை நேரத்தில் பணிக்கு சென்று வீடு திரும்புவோர், பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடுங்குளிரிலும் அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.