தமிழ்நாடு செய்திகள்

கல்வியில் சிறந்த மாநிலம் என முதலமைச்சர் கூறுவது மாய பிம்பம்: அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் பதிலடி

Published On 2025-12-17 11:47 IST   |   Update On 2025-12-17 11:47:00 IST
  • தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.
  • பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

திருச்சி:

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என தமிழக முதலமைச்சர் கூறியது தரவுகள் அடிப்படையிலேயே தான். தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் கூறுவது மாய பிம்பம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது, அது உண்மையில்லை. தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அளவில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 7.7 சதவீதமாகவே உள்ளது.

இதில் மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேருகின்றனர். எனவே இடைநிற்றல் சதவீத கணக்கில் வருகிறது. மேலும் இந்த சதவீதமும் குறையும். தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது வேதனைக்குரிய செய்தி. இந்த துயர செய்தி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும் போன உயிர் திரும்ப வராது. மாணவர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

Tags:    

Similar News