35 வயது காதலனை வீட்டுக்கு வரவழைத்து மாமியாரிடம் கொள்ளையடிக்க வைத்த 59 வயது பெண்
- வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
- போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
பூந்தமல்லி:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.
வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.
அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.
போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.