தமிழ்நாடு செய்திகள்

கடந்த 8 மாதங்களில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 410 பேர் ரெயில் மோதி பலி- தெற்கு ரெயில்வே தகவல்

Published On 2025-09-16 08:12 IST   |   Update On 2025-09-16 08:12:00 IST
  • தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
  • 84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

தெற்கு ரெயில்வேயின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடியோ, ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் கடந்து செல்லக்கூடாது என ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

என்னதான் விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதித்தாலும் ரெயில்களில் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள், தண்டவாளங்களை கடந்து செல்பவர்கள் யாரும் தங்களை மாற்றி கொள்ள முன்வரவில்லை. இதனால் பல்வேறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வபோது அரங்கேறி வருகிறது.

அந்தவகையில், தெற்கு ரெயில்வேயில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 8 மாதங்களில் தண்டவாளங்களை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதி 410 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், கடந்த 8 மாதங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து தவறி விழுந்து 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்றால், பயணிகளும், பொதுமக்களும் தாங்களே தங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Tags:    

Similar News