தமிழ்நாடு

அ.தி.மு.க.வில் உள்ள ஆதரவாளர்களை வளைக்கும் பா.ஜனதா: தேர்தல் வெற்றிக்கு கைகொடுக்குமா?

Published On 2024-02-15 08:32 GMT   |   Update On 2024-02-15 08:33 GMT
  • நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன.
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவோடு கூட்டணி சேரும் கட்சிகள் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக தெரியவில்லை.

ஆனால் பா.ஜனதா தரப்பில் வெற்றி இலக்கை எட்ட புது புது வியூகங்களை வகுத்து வருகிறார்கள். நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபை எம்.பி. யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

எனவே நீலகிரியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

மற்றொரு புறத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், மாற்று கட்சிகளில் இருந்தாலும் பிரதமர் மோடி என்ற வலிமையான தலைமை நாட்டுக்கு தேவை என்ற உணர்வுடன் இருப்பவர்கள், ஆகியோரை கண்காணித்து அவர்களில் பா.ஜனதாவுக்கு வர ஒத்துக் கொள்பவர்களை இணைப்பது இல்லாவிட்டால் தேர்தலில் அவர்களின் ஆதரவை பெறுவது என்ற அடிப்படையில் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.

ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் 15 பேர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியிலும் உழைப்பவர்களுக்கு பதவிகள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் மற்றும் கட்சியின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மை ஆகிய காரணங்களால் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களை பா.ஜனதாவுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா வலிமையோடு இருப்பது போல் அ.தி.மு.க. வும் வலிமையாக இருக்கிறது. அதற்கு வலிமையான தலைவர்களாக இருப்பது எஸ்.பி.வேலுமணியும், கே.டி.தங்கமணியும் தான்.

ஏற்கனவே பா.ஜனதா தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர்கள் இருவரையும் பா.ஜனதா வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். வருகிற 27-ந் தேதி பல்லடத்துக்கு வரும் பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்துக்கு தேவையான உதவிகளையும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News